தூரல்

பெய்யெனப் பெய்யும் தமிழ்

தெலுங்குதேசத்துல தமிழ்த்தாலாட்டு

அண்மையில பிறந்தநாள் வந்துச்சு. ஆண்டுக்கு ஒருமுறை பிறந்தநாளுக்கு மட்டும் இறைவனை நினைத்துக் கோவிலுக்குச் செல்லும் நம்மத் தலைமுறையோட வழக்கமா, அலுவல்களுக்கு இடையில அடிச்சுப் புடிச்சுப் போறதுக்குள்ள, ‘சீதாராமாஞ்சனேயா தேவாலயத்’துல ராமரோடச் சுற்றுப்புறச் சகாக்கள்-லாம் கதவைச் சாத்திக்கிட்டுத் தூங்கப் போயிட்டாங்க, ராமரும் சீதையக் கூட்டிக்கிட்டுத் தூங்கப் போலாம்னு இருந்தாரு.

நாள்முழுக்கத் தனக்குப் புரியாத வடமொழியிலும் இன்னபிற மொழிகளிலும் இறைவனை ஓதி, தன் “கடன் பணிசெய்துக் கிடப்பதே” என்று வசூலில் இருந்த ஐயர், ராமரைத் தாலாட்டுப் பாடித்தான் தூங்கவைப்பேன்-னு அடம்பிடிச்சி அவரத் தூங்கவிடாம கடைசிநேர ஓதல்கள் சிலதைச் செஞ்சுட்டிருந்தாரு. வழக்கம்போல ஐயரைக்கண்டுக்காம ராமர்கிட்ட இந்தாண்டுக்கான order list-அ அடுக்கி வைச்சுக்கிட்டு இருந்தப்ப தான் ஐயரோட அந்தச் சொற்கள் லேசாக் காதுல விழுந்துச்சு..

“…..உனக்கு…… தாலேலோ,……..தாலேலோ..”

“என்னாது….?!?!”-ன்னு அப்படியே ராமர்கிட்ட இருந்து ஐயர்கிட்ட கவனம்போன நேரம் - வாத்தியார் வர்றச் சத்தம் கேட்டு படம்வரைஞ்சினு இருந்தப் பையன் பக்கம் திருப்பி எழுதப் போவது - போல சட்டுனு ஐயர் பாடலைத் திருப்பி வடமொழிக்குக் குதிச்சிருந்தாரு. தொடர்ந்துக் கேட்ட நம் விடாமுயற்சியப் பாராட்டி ஐயர் தாலேலோவையும் வடமொழியையும் ரிப்பீட்-டினாலும் (ராமர் ரொம்ப நல்லவரு - ரெண்டுமுறைத் தாலாட்டுக்கேத் தூங்கிடுவாருப் போல), முதலில் கேட்டத் தாலேலோ-க்குமேல ஒண்ணும் பெருசாக் கேக்கல. ஆனா “மலையாளக் கரையோரம் குருவி தமிழ் பாடுதோ” இல்லையோ, “தெலுங்குக் கரையோரம் ஐயர் தமிழ் பாடுறாரா”-னு கண்டுபிடிக்காமப் போக மனசும் கேக்கல.

அதுக்குள்ள ராமர்தான் தூங்கப் போயிட்டாரே-னு, மிச்சம் மீதியிருந்த ராமரோடப் பால், பழத்தையெல்லாம் ஐயர் லபக்கிக்கிட்டிருக்க, வெளியப் போகவும் விரும்பாம உள்ள நிக்கவும் முடியாம, கால் வட்டம் போடத் தொடங்கிடுச்சு. ஓரக்கண்ணால கவனிச்ச ஐயர் “ஒருவேளை இவன் பாம்ப் வைக்க வந்திருப்பானோ”-னு யோசிச்சு முறைச்சாரு. “கோவில்-ல குண்டு வைச்சுப் பயனில்ல - அதெல்லாம் கூட்டம் வர எடத்துல வைக்கணும்”-னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே பேச்சுக் குடுத்தேன்..

“ஸ்வாமி, அதி - First ஸ்லோகம் - language தமிழ் காதா?” (அந்தப் பாட்டு தமிழ் இல்ல?)

“ம்ம்ம்ம், தெல்லேதே, அதி ஏதோ ‘மாணிக்கம் கட்டி யாரம்’ ஒக்கட்டி உந்தி” (தெரியலையே, அது ஏதோ ‘…’னு ஒண்ணு இருக்கு)

இது போதுமே வலையத்துல வலைப்போட, ஐயருக்கு முதல்ல நன்றியப் போட்டுட்டு வந்தாச்சு. அப்புறமா நேரங்கெட்ட நேரத்துல வலையத்துல வெட்டியா இருந்தப்ப கூகிளித்ததுல ஐயர் தாலாட்டியது தமிழிலும் தான்கிறது உறுதியாச்சு. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துல பெரியாழ்வாரோட மூன்றாவது திருமொழியிலிருந்து அந்தப் பாட்டு:

மூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி
(கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்)

கலித்தாழிசை

44:
மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே. தாலேலோ
வையமளந்தானே. தாலேலோ. (2) 1.

நன்றி - மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்

ஆகா, என்ன அருமையா எளியதமிழ்-ல இறைவனுக்கே தாலாட்டுப் பாடியிருக்கிறார் ஆழ்வார். பாவம் அந்த ஐயர் இதோடப் பொருள் தெரியாம - பொருள விடுங்க, இதோட மொழிக்கூடத் தெரியாம நாளும் பாடிக்கிட்டிருக்காரு! (ஒருவேளை மொழித் தெரிஞ்சிருந்தாப் பாடியிருக்க மாட்டாரோ..!) ஏதோ, தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டே சிலதுகள் செஞ்சுக்கிட்டிருக்கற வடமொழி வண்டவாளத்துக்கு இது தேவலாம் இல்ல..

குறிச்சொற்கள்: , , ,
November 10, 2008 - 8:16 PM சாரல்கள் (4)