தூரல்

பெய்யெனப் பெய்யும் தமிழ்

« ஈழக்கதவுகள் - சூரியதீபன்

எங்கே இருக்கிறாய் இன்னும்..

வெண்ணிலவின் கேலிப்புன்னகை

ஏளனமெய்ய அருகே இருகோள் அழைத்து என்னைக்

கேலிசெய்யும் வானில் வெண்ணிலவின் பிறை!

வீதியெல்லாம் ஒளிகள் பால்வெளியில் வந்து எனக்கு

சேதிசொல்லும் நானோ நீயில்லாததன் குறை; என்

விண்ணை விரிக்க வரும் விண்மீனே,

எங்கே இருக்கிறாய் இன்னும்..

மின்னிக்கொண்டு?

மூங்கில் குழல் தூது

நீயின்றி நானும் தனியாய் போவதைக் கண்டு

நின்றுவிடும் பட்டப்பகல் போலஎன் நிழல்!

தூதுவிடத் தென்றல் காற்றும் காதல் கொண்டு

ஊதிவரும் மூங்கில் காட்டில் குழல்; என்

நிலத்தில் நடக்க வரும் நந்தவனமே,

எங்கே இருக்கிறாய் இன்னும்..

மலர்ந்துக்கொண்டு?

புல்லட்டின் பின்னிடம்

பாவை உன்கால் போகும் வழிஆகப் பார்த்துப்

பளிங்காகும் கடைத் தெருவின் கட்டாந்தரை!

பட்டவள் உன்மேனி படும் தீண்டலை வேண்டிப்

பூஞ்சையாகும் புல்லட் வண்டியின் பின்னிடம்; என்

ஊரில் உலவ வரும் ஊதாப்பூவே,

எங்கே இருக்கிறாய் இன்னும்..

சிரித்துக்கொண்டு?

பூக்காச் செடி

பூக்கூந்தல் வாசம் வீசும் நாள்வரும் வரை

பூக்கா நோன்பிருக்கும் தோட்டத்துச் செடி!

முரடனது மரக்கால் மட்டும் இறங்கிஏறத் தரை

கரடாக்கித் தடுக்கிவிடும் மாடத்துப் படி; என்

வீட்டை வரைய வரும் வானவில்லே,

ஏன் இருக்கிறாய் இன்னும்..

ஒளிந்துக்கொண்டு?

தனிமரம்

மணல்மீது மீண்டும் வந்து மோதும் கடலலையும்

கணக்கின்றிக் கூறுமென் ஏக்கம் தன்னை;

சணல் காட்டைத் தாண்டிவரும் ஒற்றை மரமும்

உணர்த்திச் செல்லும் தனிக்கட்டை என்னை; என்

தனிமையைத் தகர்க்க வரும் தேவதையே,

எப்படி இருக்கிறாய் இன்னும்..

தூங்கிக்கொண்டு?

பட்டாம்பூச்சி

பண்பாடி பறந்து செல்லும் மனமும் நான்உனைக்

கண்மூடி கனவில் கண்ட கணம்;

உறங்கும் நேரம் எல்லாம் வரும் பட்டாம்பூச்சிஉன்

நிறங்கள் நிற்கும் நினைவில் நிதம்; என்

கனவைக் கடத்த வரும் காதலியே,

எதற்கு இருக்கிறாய் இன்னும்..

காத்துக்கொண்டு?

குறிச்சொற்கள்: , ,
December 5, 2008 - 12:55 PM
13 comments »
  •  
சாரல் சிந்த..