ம்ம்.. அது ஒரு காலம். மூணு வருஷம் ஆச்சு, நான் அவுருகூட வந்து. அப்பலாம் எங்குளுக்கு ரொம்ப புதுசு. அவ்ள பேரு எங்கள வச்சுக்க வசதி கெடயாது. எங்கூட இருந்தவளுங்கலாம் அசிங்கமா, குண்டா, பெருசு பெருசா இருந்தப்ப, நாமட்டும் ரொம்ப அழகா, ஒல்லியா, குட்டியா இருந்தேன். அதேன் அவுருக்கு புடிச்சிருந்துச்சு. வந்து பாத்தவரு வச்சகண் வாங்கல. ஒடனே கூட்டிக்கினு வந்துட்டாரு.
அவுருக்கு வேற எம்புகழ பாடறதுனா சொல்லவே வேணா; ஊருக்கே சொல்லுவாரு. நாந்தேன் மொதமொதல்ல அவ்ள சின்னதா அடக்கமா அழகா இருந்தேன். ஒத்த குரல்ல கத்திகினு இருந்தவளுக மத்தியில பலகுரல்ல பாடுவேன். அதேன் அவுருக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு.
அவுரு எதோ சாப்புட்டுவேரு கம்பெனியாமே, அதுல வேல செஞ்சாரு. நெரந்தர வருமானம் இல்லாம யாரும் எங்கள வச்சுக்க முடியாது. அப்போலாம் எங்களக் கூப்பிட்டா, கூப்புடறவங்க மட்டுன்ல்ல, எங்கள வச்சிருக்கறவங்ககூட பணம் குடுக்கணும். அதுவும் எங்க வேணாலாம் இருக்க மாட்டோம்; பெரியபெரிய ஊருங்கல்ல மட்டுந்தேன். அவுரு எக்கச்சக்கமா செலவு பண்ணித்தேன் என்ன கூட்டிக்கினு வந்தாரு. மாச சம்பளத்துல பெரும்பகுதி எனுக்கே செலவு பண்ணுவாரு.
எதோ சீனா தானா, காணாம் போனானு ஒரு பாட்டு, வீணை வாசிக்கறா மாதிரி வெள்ளக்காரிகூட ஆட்டம் போடுவாளே, அதக் கத்துக்கச் சொல்லி, யாரு கூப்புட்டாலும் பாடச் சொல்லுவாரு. அதுலயே நானும் அவுரும் செம பிரபலம் ஆயிட்டோம். எல்லாம் வந்து ‘எங்களுக்கும் இந்த பாட்டு வேணும், சொல்லித்தாங்க’னு கேப்பாங்க, ஆனா ஒத்தக்குரல்காரிங்கலாம் அவ்ளோ நல்லா கத்துக்கினு பாட முடியல, அதனால வுட்டுட்டாங்க.
நாளாக நாளாக நானும் நெறந்தேஞ்சு போயிட்டேன். அவுரும் அப்பப்ப புதுத்துணி வாங்கிப் போடுவாரு. அப்புடியே புதுசா பொறந்தவ மாதிரி நானும் துணி கிழியற வரைக்கும் சீவி சிங்காரிச்சிக்கினு திரியுவேன். நானும் அவுருக்குனு அயராம ஒழச்சேன்.
ம்ம்.. அது ஒரு காலம். என்ன பண்றது.. வயசாக ஆக நானும் பழசாயிட்டே போனேன். எப்படா நம்மள கழட்டிவுட்டுக்கினு வேற ஆள பாப்பாருனு பாத்துக்கினு இந்தப்பதேன் ஒருநா அவள கூட்டிக்கினு வந்தாரு; என்னயவிட இன்னும் அழகா, குட்டியா இருந்தா; எந்த பாட்டு சொன்னாலும் பாடுவாளாம், சினிமா பாட்டுகூட ஒண்ணு ரெண்டு பாடிக்காட்டுனா; நெறந்தேய மாட்டாளாம்; இன்னும் எதோ கண்டது போனத செய்வானு பேசிக்கினாங்க. அவுர பிரியப் போறோம்னு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
கடசியா அந்த நாளும் வந்துச்சு, அந்த புது சிறுக்கிய மட்டும் வச்சிக்கினு, என்ன ஊருல அவங்கண்ணன்கிட்ட அனுப்பிட்டாரு. இப்பதேன் எல்லாம் வச்சிக்கற அளவுக்கு மலிஞ்சு போயிட்டமே. எந்த ஊருல வேணா இருக்கறோம். புது ஊரு, புது எடம், எல்லாம் நல்லாதேன் இருந்துச்சு. அவுங்கண்ணன் என்ன அவுரளவுக்கு பயன்படுத்தலனாலும் கண்ணுங்கருத்துமாதேன் பாத்துக்கறாரு.
ம்ம்.. இது ஒரு காலம். இவுரு எதோ சின்ன வீடு, பெரிய வீடுனு குத்துப்பாட்டு ஒண்ணு, மேஸ்திரிங்க கட்டட வெல செஞ்சுக்கினு பாடுவாங்களே, அதக் கத்துக்கினு பாட சொல்றாரு. இந்த ஊருல இந்த பாட்டுக்குத்தேன் மவுசு. காலம் எவ்ளொ மாறிப்போச்சு. இப்போலாம் எங்கள கூப்பி்டறவங்க மட்டு்ம் பணம் குடுத்தாப்போதுமாம்.
இன்னும் எத்தன வருசமோ, மாசமோ? எப்ப இருப்பனோ, எங்க போவனோ? என்னக்கி இவுரு என்ன தூக்கிப்போட்டுட்டு வேற ஒருத்திய கூட்டிக்கினு வருவாரோ? அதுக்கப்புறம் என்னா ஆவனோ!
ம்ம்.. இது ஒரு காலம்!